search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி பெண் காவலர் தற்கொலை"

    திருச்சி பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருச்சி:

    கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த இவருக்கும் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த வெற்றிவேலுக்கும் (24) இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

    இதனை அறிந்த வெற்றிவேலின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்திருந்தனர். அதன்படி இன்று சுவாமிமலையில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் காதலன் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் செந்தமிழ் செல்வி, தான் தங்கிருந்த காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செந்தமிழ்செல்வி தற்கொலைக்கு காரணமான வெற்றிவேல், அவரின் அண்ணன் கைலாசம், அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்லப்பன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதனை தொடர்ந்து போலீசார் ஆபாசமாக பேசுதல், தற்கொலைக்கு தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து அறிந்த 3 பேரும் தலைமறைவாகினர். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதில் வெற்றிவேல் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூரில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

    விசாரணையில், செந்தமிழ் செல்வியை நான் காதலிக்கவில்லை என்றும், அவர் வேறு ஒருவரை காதலித்ததாகவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர் செய்து அவரை லால்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவர் செந்தமிழ்செல்வியுடனும், அவரது தந்தையுடனும் பேசிய 15 நிமிட ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியது.

    அதில் செந்தமிழ் செல்வியின் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும், வெற்றிவேலின் அண்ணன் கைலாசம், அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருவரும் பேசிக்கொண்டனர். இந்த பேச்சு தொடரும் போதே செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் இணைப்பை துண்டித்துவிடுகிறார். பின்னர் இருவரும் திருமணம் குறித்து பேசிவிட்டு இணைப்பை துண்டிக்கின்றனர்.

    இது கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய உரையாடலாக இருக்கலாம் என்றும், வெற்றிவேலின் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்ளாததை அறிந்த செந்தமிழ் செல்வி தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    தற்கொலை செய்த செந்தமிழ் செல்வி தங்கியிருந்த வீட்டில் அவரால் எழுதப்பட்ட டைரி ஒன்றையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதில் இருவரின் காதல் குறித்த தகவல்களும், காதல் தோல்வியால் அவர் எழுதிய வாசகங்களும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் டைரியில் ‘தனது சாவிற்கு யாரும் காரணமில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை’ அதனால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருந்ததாக கூறுகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள வெற்றிவேலின் அண்ணன் கைலாசம், அவரது அண்ணி ராஜசுந்தரியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் சிறைத்துறையில் பணியாற்றி வருவதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    ×